Tuesday, 28 December 2010

காதல் கானா...

 காதல் கானா...

கண்ண தொறந்து பாக்கசொல;


காலையில பத்துமணி...

காதாண்ட கத்திகினேகீரா;

...ஏன் ஊட்டுக்காரி...இன்னாத்துக்கு கூவுறன்னு

உட்டேன் ஒன்னு லெப்ட்டுல...

ங்கொம்மால உருள கெயங்கு மாறி

வீங்கிகிச்சி கயித்துல...வழிச்சி வழிச்சி ஊத்துனா பாரு;

வாய் கீயிர வரைக்கும்...

அவ சொன்னதெல்லாம் கேட்டீங்கோ?

ஒங்க காது நொறைக்கும்...மொறச்சி மொறச்சி பாத்துகினே

வீட்டுக்குள்ள வந்தா...

மொனவிகிட்டே வேலையெல்லாம்

ஈத்து போட்டு செஞ்சா...பண்ணுனது தப்புன்னு;

அப்பாலதான் புரிஞ்சிது...

பொண்டாடிக்கு பூ வாங்க

மன்சு ரொம்ப துடிச்சுது...மல்லிய பூவும் அல்வாவும் - என்

மல்கோவாவுக்கு வாங்கிக்கினு...

மாலை நேரத்துல

மன்மத ராகம் பாடிகினு...வேலை முடிஞ்சதும்

வீட்டுக்கு போயி பாத்தா?

விட்டத்துல தொங்கிபுட்டா

வீட்டுக்காரி சீதா...ஒன்னியும் இல்லாத பிரச்சனைக்கா

உசுர உட்ட பாவி?

ங்கோத்தா உன்ன தேடி வரும் பாரு

என்னோட ஆவி...பொண்டாட்டிய அடிக்காத...

சந்தேகத்துல துடிக்காத...

பின்னால போயி பாக்காத...

பேச்ச ஓட்டு கேக்காத...

முழுசா அவள நம்பு...

முடியலன்னா?

என்ன மாறி தொங்கு...

-சுவாமிநாதன்
சோழியவிளாகம்

Monday, 27 December 2010

ஆயா

  ஆயா
நினைவு தெரிந்த பொது
நீயே அருகில் நின்றாய்...
பசியில் அழுத பொது
...பிசைந்து அன்னம் தந்தாய்...


அம்மணமாய் அலையும்போது
அள்ளி முத்தமிட்டாய்...
கண் கலங்கி நின்றபோது
கன்னம் துடைத்திட்டாய்...


கண்ணயர்ந்த சாய்ந்தபோது
கனத்த மடி தந்தாய்...
கண்மூடி தூங்கும் போது
கட்டி அனைத்திட்டாய்...


அடம்பிடித்து கேட்டபோது
அழகாய் விளக்கம் சொன்னாய்...
குளிக்க நான் போனால்
கூடவந்து முதுகு தேய்த்தாய்...


பள்ளிக்கூடம் போகும்போது
பாதை முற்றும் பார்த்திருப்பாய்...
கலைத்து வரும்போது
கதைகள் நூறு சொல்லிடுவாய்...


அரை டவுசர் அணிந்த நானும்
ஆண்மகனாய் ஆகிவிட்டேன்...
ஆசையாய் வளர்த்த நீயோ!
ஆகாசம் சென்றிட்டாயோ?


படல் போட்டு வேளி மூட;
பலமுறை சொன்னவளே?
பாவி உன்னை விட்டு செல்வேன்;
என்றொரு நாளும் சொல்லலையே!


பயிர்பிடித்து நாற்றடிக்கப்;
பாங்காக சொன்னவளே?
பாதியிலே போய்விடுவேன்;
என்றொரு நாளும் சொல்லலையே!


ஐந்து பிள்ளை பெற்று
அனைத்திற்கும் உணவு தர...
பட்டினியாய் இருந்தபோதும்
நடவு நடப் போனவளே?


அவரவர் குடும்பத்தோடு
மகிழ்ச்சியாய் இருக்கையிலே...
அனைத்திற்கும் வித்திட்ட
அஞ்சலை உன்னைக் காணோமே?


கொள்ளு பேரன் வந்தபோதும்
எந்தன் பேரன் நீதான்னு
கூசாமல் சொன்னவளே!
குழியில் உன்னை வைத்தபோது...
குரல்வேடிக்க அழுத என்னை
கண்திறந்து பாக்கலையே?


பீத்துணி கசக்கி போட்ட
பெற்றவளே உன்னை எண்ணி...
பேரன் நான் அழுகிறேனே?


பேசாம கொள்ளாம இருக்குறியே - உனக்கு
பாசமது போயிடிச்சா?
பாவி மனம் காஞ்சிடிச்சா?


ஏகவசனம் பலசொல்லி ஏகத்துக்கும் திட்டுவியே?
ஏதாவது ஒன்றை சொல்லி இப்ப என்னை திட்டேன்?


கோவத்துல நீ அடிச்ச;
காயத்துக்கு மருந்து போட்டு...
கால்மாட்டுல அழுதவளே?


பாவமாவே இல்லையாடி என்னபாத்தா?
பாதகத்தி உனக்கு யார்மேல என்ன கோவம்?


ஆயிரந்தான் இருந்தாலும்...
ஆயா நீயிருந்தா?
ஆலயமே போகமாட்டேன் - எனக்கு
அத்தனையும் நீதான...


-சுவாமிநாதன் 
சோழியவிளாகம்

Thursday, 23 December 2010

ஒரு பகல் நேரத்தில்...

!!!!!கவிதை!!!!!!


நான் எழுதிய இக் கவிதை தினமணி கதிரில் (22/04/2001) அன்று வெளிவந்தது.

நீ
வந்து
சென்றதற்கான
அடையாளம் எதுவும்
இல்லையென்றுதான்
நினைத்திருந்தேன்.


பார்வையும்
அப்படித்தான்
சொன்னது.


மேஜையில்
இருந்த
பூச்-ஜாடியும்
அப்படியே
இருந்தது.


கொடியில்
காயவைத்த
*அவளது துணியிலும்
வித்யாசம் இல்லை.


டம்ளரில்
இருந்த
பாலுக்கும்
சேதமில்லை.


இருந்தும்
கண்டு பிடித்துவிட்டேன்,


அட!
போக்கிரி
சிட்டுக்குருவியே...


அரிசியை
இப்படியா
இறைத்துவிட்டு
செல்வது...?

-தோழன் மபா

*நான் முதலில் எழுதிய கவிதையில் 'துணியிலும் வித்யாசம் இல்லை ' என்று எழுதிஇருந்தேன், இப்போது துணிக்கு முன்பாக 'அவளது' என்ற வார்த்தையை சேர்த்து எழுதி உள்ளேன்.

புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டும்


உன் வசிகர தோற்றத்தில் வசியப்படும்


ஆண் மகன்கள்

உன் மெல்லிய வெள்ளை உடலில்

தங்கம் நிறம் பூசிய பொன் உதடுகள்

உன்னிடம் வசியபட்டவர்களில்

நானும் ஒருவன்

உன் அழகிய உடைகளில்ருந்து

உன்னை உருவிவிட்டு ,,,,,,,,

உன் பொன் நிற உதட்டில்

என் வற்றி போன உதட்டை பதிக்கும் போது

என் விடலை பருவ வயதுக்கு

இது தேவைதானா என்று...

நினைக்க தோணும்.

பெண்ணாகவே உன்னை பாவித்ததால்

 புண்ணாகிய போன இதயமும்...

புகையாக போன

புண்பட்ட நெஞ்சும்

புகைந்துகொன்டுதான் இருக்கிறது...

புவிக்குள் போகும்வரை....

புகையாய்.... ?!
 
-ப. கெளதம்

Saturday, 16 October 2010

சங்கத் தமிழ் அனைத்தும் தா -ஹெச்.ஜி.ரசூல்


இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற
மூதாயியை தேடியலைந்த களைப்பில் பறவை
ஒருகாலத்தில் தன் தாகம் தணித்த
மண்பானையைத்தேடி அல்லலுற்றது.

பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன
கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை
ஐவகை  நிலங்களையும் அலகில் கொத்தி
அடைகாக்க இன்னொரு இடமற்றுப் போக...

நீலவண்ண கடற்பரப்பில்
அந்தப் பறவை ஒரு முட்டை இட்டது.

அதன் குஞ்சு பொரிப்பில்
ஆயுதமும் புல்லாங்குழல் மறுகையுமாய்
அணங்கொருத்தி உதித்தெழுந்தாள்.

வயல்வெளியெங்கும் சலசலத்து திரிந்த
மருதயாழின் ஓசை வழிந்தோட
கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின்முன்
பிரபஞ்சமே தன்னை புனைந்து கொண்டது.

பாணனின் கோப்பை
இப்போது காலியாயிருந்தது
தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்தப் பூவை
குழந்தைக்கு தந்து வலியில் மூழ்கிய
பச்சைத்தாவரத்தின் கண்களில்
ஒருதுளி ரத்தம் தேங்கியிருந்தது.

அனல்வாதத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட ஏடுகளும்
புனல்வாதப் பேரலையில் அழிக்கப்பட்ட சுவடுகளும் பற்றி
ஆதித்தாய் அவ்வை கவலையுற
அந்தப் பறவை தன் நாக்கு வெட்டப்பட்ட பிறகும்
எவ்வித பதட்டமுமின்றி சொற்களை உதிர்க்கிறது.

சங்கக் கவிதையின் எழுத்தொன்றைத்திறந்து
காக்கைப்பாடினி வெளியேவந்தாள்.

ஆறாம்நிலத்தில் துளிர்த்த அறிவியல்தமிழி நீயென
அருகே வந்தவள் முத்தம் தருகையில்
பறவைகள் தொலைந்துபோன பூமியில்
குளிரூட்டப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து
கணிப்பொறித்திரையில்
என் சின்னமகள்
ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தாள்.


"சற்றே பெரிய கவிதைதான்.  அதன் விரிவான  போக்கும், மொழி அளுமையும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. தமிழின் தொன்மையில் தலைவைத்து, நம்மின் காலத்தில் நுழைந்து, நம்மை தமிழின் வேர் பிடிக்கச் செய்கிறது கவிதை. அதன் சிறப்பு கவிதையின் விட்டுப் போகாத தன்மையில் இருக்கிறது.

செப்டம்பர் மாத தீக்கதிர் நாளிதழின் ரம்ஜான் சிறப்பு மலரில் இக் கவிதை இடம்பெற்றுள்ளது.
  

Saturday, 27 March 2010

தருணங்கள்

  !!!!!கவிதை!!!!!
  • வந்து வந்து
   போகுதடி
   வாய்க்கும் தருணமெல்லாம்,

   அந்திஎல்லாம்
   காத்திருந்தேன்
   ஆவல்
   வடிவாக இருந்தேன்,


   நீ
   சொன்ன
   மாலையும் கடந்து
   நாடு நீசியும்
   வந்ததடி,


   காத்திருக்கும்
   வேலையில
   காலாற - நான்
   நடக்க...

   பார்த்தேனடி -உன்
   உருவை
   படகின் மறைவினிலே...

   மறைவில் -நின்று
   என் தவிப்பை - நீ
   ரசிக்க...

   'ஓ...'

   இதுவும் - ஒரு
   காதல் விளையாட்டோ....?

  -தோழன் மபா


  Sunday, 7 March 2010

  பிடிக்கலயோ...?!

  வாசகர்களே "தோழன் மபா கவிதைகள்" வலைப் பதிவில் இனி பிறரது கவிதைகளும் இடம் பெறும்.

  ஆதரவிற்கு நன்றி!
  -தோழன் மபா  பிடிக்கலயோ...?!

  உன் தேகத்தினால் என்னை - தீண்டினாய்
  உன் சந்தேகத்தினால் என்னுள்- தீயை மூட்டினாய்
  உன் விவேகத்தினால் என்னை -வீழ்த்தினாய்
  உன் அழகினால் என்னை - கிறங்கடித்தாய்
  உன் மவுனத்தினால் என்னை- பேசவைத்தாய்
  உன் ஓரப் பார்வையினால் - என்னுள்
  ஓராயிரம் மின்னல்கள் தோன்றவைத்தாய்
  பிறகு ஏன் உன் அப்பனிடம் சொல்லி
  என்னை உதைக்க வைத்தாய்?!


  -ரவி கல்யாண்.
  மயிலாடுதுறை.

  Saturday, 6 March 2010

  காவியுடை கபடதாரி  சாமியென்பான் பூதமென்பான்
  சன்னிதானத்தில் - வைத்து
  சல்லாபம் செய்வான்.


  ஆசி வழங்குவான் அறிவுறை சொல்லுவான்
  பக்தன் சொத்தை -குறிவைத்து
  அவன் மனைவிக்கு காய் நகர்த்துவான்.


  மங்கையென்பான் மதுகுடிப்பான்
  மறைவிடத்தில் -வைத்து மாமிசம் தின்பான்
  பென்ஸ் காரில் பவனிவந்து பணத்தில் புரளுவான்.


  லிங்கம் எடுப்பான், காற்றில் கை வைத்து தங்கம் தருவான்,
  தன்னை நாடி வரும் பக்தன் வீட்டில் - சூனியமென்று
  அவனுக்கே கொல்லி வைப்பான்.


  இடத்தை வளைப்பான் மடத்தை போடுவான்
  பணம் உள்ளவனாய் -பார்த்து பல்லக்கு ஏறுவான்
  காவியில் வலம் வந்து கயமை செய்வான்.


  கட்டிவைத்து அடித்தாலும்
  காரி உமிழ்ந்தாலும்-காலிலியிருப்பதை
  கழட்டி அடித்தாலும் கயவனின் நிறம் மாறாது
  கபடதாரியின் வேடம் கலையாது.


  மக்கள் சொன்னாலும் திருந்தாது பட்டாலும் வருந்தாது
  ஆட்டுமந்தை கூட்டமிது - அறிவு வளரா மந்தையிது
  பகுத்தாய்ந்து பாராமல் பிறர் சொல் கேளாமல்
  தனி மனிதனை வணங்கும் காட்டுமிராண்டிக் கூட்டமிது.

  -தோழன் மபா

  Wednesday, 24 February 2010

  நீக்ரோ!

  1994 வாக்கில் அமெரிக்காவில் கருப்பர்களுக்கெதிராக ஒரு பெரும் கலவரம் வெடித்தது. கருப்பின நீக்ரோக்கள் ஆங்காங்கே வீதிகளில் கொலுத்தப்பட்டனர் உடல் கிழிக்கப்பட்டனர். நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த போது, கறுப்பர்கள் மீதான் தாக்குதல் உட்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் நான் எழுதிய கவிதை 'இளந்துதில்' வெளிவந்து பலரின் பாராட்டையும் பெற்றது.
  அமெரிக்காவில் தற்போது ஒரு வரலாற்று மாற்றம் நிகழந்து இருக்கிறது . பரக் ஒபாமாவை அதிபராக தேர்ந்தெடுத்து உள்ளனர் அந்நாட்டு மக்கள். இது ஒருநாளில் நிகழ்ந்தது அல்ல. ஆப்ரகாம் லிங்கன் முதல் மால்கம் எக்ஸ் வரை தங்களது உயிரை தந்து கருப்பர்கள் சுய மரியாதையுடன் வாழ, ஒரு புதிய பாதையை போட்டு சென்றுள்ளனர். அந்த பாதை இன்று கருப்பர்களை அமெரிக்க அதிபராக வருமளவிற்கு உயர்த்தியுள்ளது.

  அமெரிக்காவில் கறுப்பர்கள் மீதான தாக்குதல் என்பது உலகம் அறிந்த ஒன்று. அதையெல்லாம் சகித்தஅவர்கள் அமெரிக்காவிற்கு பல துறைகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். தேச பற்று மிகுந்த அவர்கள் மீது வெள்ளையர்களின் வன்கொடுமை பல வழிகளிலும் அவர்கள வாழ்வை நசுக்கியது. விளையாட்டு துறையில் அமெரிக்க பெரும் பல தங்க பதக்கங்களுக்கு கறுப்பர்களின் அந்த போராட்ட குணம் தன் காரணம் என்றால் மிகையல்ல.


  தமிழன்வீதியில் வந்ததை தோழன் மபா கவிதைக்காக மீள் பிரசுரம் செய்கிறேன்.  நீக்ரோ !

  என்
  சகோதரனே-நீ
  புறக்கனிக்கப்படுகிறாய்
  அதுவே !
  உன்னில் எனக்கொரு
  நேசிப்பை ஏற்படுத்தியது!

  உன் அடிமைத்தனமும்
  இந்தியர்களின் அடிமைத்தனமும்
  பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தில்
  பேர் போனது,

  நீயும் - ஏன்
  என்று கேட்க மாட்டாய்
  நானும் - எதற்கு
  என்று - வினவ மாட்டேன்.

  என் நேசிப்பும்
  அப்படியே....

  உன் கருப்பு தசைகளில்
  திசை எதுவாய் இருந்தால் - என்ன?

  நீ
  பெரும்
  பதக்கமும் - புகழும்
  அமெரிக்கர்களுக்கு
  வேண்டும்.

  பின்னர்
  சான்பிரன்சிஸ்கோவில்
  அவ்வப்போது
  கொளுத்தப்படுவாய்
  முதுகில் குத்தப்படுவாய்.

  மண்ணில் மாண்புகளை
  ஏற்படுத்திய-நீ
  மனதில் மரணித்துபோவாய்,
  நீயும் மனிதன்தானே....!

  உலகஅரங்கில் -உன்
  இடத்திற்கு - நீ
  போராடும்போது - நான்
  தவித்திருக்கிறேன்,
  என்னால்
  உதவமுடியவில்லையே...என்று.

  ஆமாம் சகோதரனே !

  கறுப்புத் தோல்
  எங்களுக்கோர் அங்கி
  உனக்கு அதுவே
  போர்க்கொடி!


  உன்னை
  நேசிக்கின்றேன் - என்
  ஆப்ரிக்க சகோதரனே

  நான்
  இந்தியன் என்பதால்.

  - தோழன் மபா

  Friday, 12 February 2010

  காசி ஆனந்தனின் ஹைக்கூ க(வி)தைகள்!
  காசி ஆனந்தன் - ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவர். ஈசாப் கதைகள் பாணியில் கவிஞர் எழுதியுள்ள இந்தக் கதைகள் வித்யாசமானவை. ஹைக்கூ கதைகளா? என்று திகைக்காதீர் ஒவ்வொன்றும் ஒரு வைரம். 1994ம் வருடம் இக் கவிதை ' சுபமங்களா'வில் வெளிவந்தது.

  உரிமை:

  மழை
  தவளைகள் மகிழ்ச்சியோடு உரக்க குரலெழுப்பின.

  குளத்தில் இருந்த ஆமை தவளைகளைப் பார்த்துச் சொன்னது:-

  'இப்படி கத்துகிறீர்களே - உங்கள் குரலைக் கேட்டுப் பாம்பு
  உங்க்ளைப் பிடித்துவிட்டால் உங்கள் நிலை என்ன ஆவது?'

  தவளைகள் சிரித்தன,

  'நாங்கள் கொஞ்சமும் கவலைப்பட மாட்டோம் என்றது'
  கூட்டத்தில் ஒரு தவளை.

  இனோரு தவளை சொன்னது
  'மூச்சை இழக்கலாம் - பேச்சை இழக்கலாமா?'


  **********

  நடப்பு:

  சேவல் கூவியது.

  'நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு
  வாழ்த்துகிறது....' என்று கதிரவன் பூரித்துப் போனான்.

  மாலை வந்தது.
  கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான்.

  சாயும் போது...

  'நான் விழுகிறேனே...என்னைத் தாங்க யாருமே வரமாட்டார்களா' என்று ஏங்கினான்.

  சேவலை அவன் எதிர்ப்பார்த்தான்.
  வரவில்லை.
  விழுந்துக்கொண்டே கதிரவன் சொன்னான்:-

  'எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
  விழும்போது தாங்க வருவதில்லை'


  *********
  சண்டித்தனம்:

  'எல்லொரையும் அடித்து நொறுக்குவேன்...'

  இடியோசையோடு சண்டித்தனத்தில் இறங்கியது மின்னல்.

  ஒரு நொடிதான்...

  வளைந்து நொறுங்கி அது முறிந்து விழுந்தது.

  மண்ணில் இருந்தபடியே மின்னலின் சண்டித்தனத்தையும் விழ்ச்சியையும்
  பார்த்த தவளை சொன்னது.

  'சண்டியாய் எழுவான்
  நொண்டியாய் விழுவான்'


  ******

  தேவை:

  புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.

  மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-

  'ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?'

  தாய்க்குருவி சிரித்தது.

  'மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தோவையில்லை' என்றது தாய்.

  தாய்குருவி சொன்னது:-

  'வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்'.

  Wednesday, 10 February 2010

  முன்பு போலவே...


  மழை பெய்யும்-இந்த
  இரவில்
  வானம் இருண்டு
  குளிருடன் கிடக்கிறது.

  மின்னல் வெட்டும்
  அகால வேளையில்
  உணர்வுகள்
  ஒற்றையடிப் பாதையில்
  வெளிச்சமிட்டுக் கிடக்கின்றன...

  ஊதல் காற்றின்
  தாலாட்டில் -இருவர்
  உடலும் சிலிர்த்து
  உலகின்
  மறு கூட்டலுக்கு
  தயாரானது,

  அசைந்தெரியும்
  வெளிச்சத்தில்
  முகங்களும் கைகளும்
  உயிர்களுக்குள்
  துழாவின...

  அடித்து பெய்த
  மழையில்
  படுக்கை;
  உணர்வுகளுக்குள்
  அமிழ்ந்தே கிடந்தது.

  எதன் பொருட்டும்
  இருந்திராத
  முன்மாதிரியில்
  மீண்டும் - ஓர்
  இரவு

  செப்பனிடப்படாமல்
  முன்பு போலவே...
  கலைந்தே
  கிடந்தது.

  Sunday, 7 February 2010

  திக்கற்றவர்களின் தெய்வம் -"அன்னை தெரசா"

  • 1997ம் வருடம் செப்டம்பர் 6ம் தேதி, அன்னை தெரசாவின் இறப்புச் செய்தி உலகை கலங்கடித்த நேரம். அப்போது நான் தினபூமியில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன், அன்னையின் மறைவு என்னையும் தாக்கியது. அன்னையின் மறைவுக்காக நான் எழுதிய கவிதைதான் இது. செப்டம்பர் 13ம் தேதி அன்று, தினபூமி நாளிதழில் முதல் பக்கத்தில் இக் கவிதை வெளிவந்தது.

   திக்கற்றவர்களின் தெய்வம்
   "அன்னை தெரசா"


   எதுவுமற்ற இருட்டில்
   தனித்து விடப்பட்ட
   உலகில்
   உன் வருகை
   சூரியனாய் பிரகாசித்தது

   நலிந்த கைகளில்
   வலிமை வாய்ந்த-உன்
   அன்பு...
   நிறப் பாகுபாடுகளைக்
   கடந்து...

   மனித நேயத்தின்
   மகத்துவத்தை -உலகிற்கு
   உணர்த்தின,

   முகவரி அற்ற
   மனிதர்களின்
   முகவரியாய் -நீ
   மாறிய பிறகு
   மாற்றம்
   மற்றவர்களிடமும்
   ஏற்பட்டது

   திக்கற்றவர்களுக்கு
   நாமும்
   துணை என்று !

   உன் பயணம்
   தொடங்கிவிட்ட வேளையில்
   மொளனக் கதறலோடு
   நாங்களும்
   பின் தொடர்கிறோம்

   நீ
   ஒளியாய் பிரகாசித்து
   மெழுகாய் உருகிவிட்டாயே!

   உலக விழிகளின்
   கண்ணீர் -உனது
   காலடியில்

   எங்கள் அன்னையே !

   நீ
   மீண்டும்
   வருவாய்தானே...?

   "தேவதூதர்கள்
   மீண்டும்
   உயிர்த்தெழுவார்கள்"