Wednesday 24 February 2010

நீக்ரோ!

1994 வாக்கில் அமெரிக்காவில் கருப்பர்களுக்கெதிராக ஒரு பெரும் கலவரம் வெடித்தது. கருப்பின நீக்ரோக்கள் ஆங்காங்கே வீதிகளில் கொலுத்தப்பட்டனர் உடல் கிழிக்கப்பட்டனர். நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த போது, கறுப்பர்கள் மீதான் தாக்குதல் உட்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் நான் எழுதிய கவிதை 'இளந்துதில்' வெளிவந்து பலரின் பாராட்டையும் பெற்றது.
அமெரிக்காவில் தற்போது ஒரு வரலாற்று மாற்றம் நிகழந்து இருக்கிறது . பரக் ஒபாமாவை அதிபராக தேர்ந்தெடுத்து உள்ளனர் அந்நாட்டு மக்கள். இது ஒருநாளில் நிகழ்ந்தது அல்ல. ஆப்ரகாம் லிங்கன் முதல் மால்கம் எக்ஸ் வரை தங்களது உயிரை தந்து கருப்பர்கள் சுய மரியாதையுடன் வாழ, ஒரு புதிய பாதையை போட்டு சென்றுள்ளனர். அந்த பாதை இன்று கருப்பர்களை அமெரிக்க அதிபராக வருமளவிற்கு உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவில் கறுப்பர்கள் மீதான தாக்குதல் என்பது உலகம் அறிந்த ஒன்று. அதையெல்லாம் சகித்தஅவர்கள் அமெரிக்காவிற்கு பல துறைகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். தேச பற்று மிகுந்த அவர்கள் மீது வெள்ளையர்களின் வன்கொடுமை பல வழிகளிலும் அவர்கள வாழ்வை நசுக்கியது. விளையாட்டு துறையில் அமெரிக்க பெரும் பல தங்க பதக்கங்களுக்கு கறுப்பர்களின் அந்த போராட்ட குணம் தன் காரணம் என்றால் மிகையல்ல.


தமிழன்வீதியில் வந்ததை தோழன் மபா கவிதைக்காக மீள் பிரசுரம் செய்கிறேன்.



நீக்ரோ !

என்
சகோதரனே-நீ
புறக்கனிக்கப்படுகிறாய்
அதுவே !
உன்னில் எனக்கொரு
நேசிப்பை ஏற்படுத்தியது!

உன் அடிமைத்தனமும்
இந்தியர்களின் அடிமைத்தனமும்
பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தில்
பேர் போனது,

நீயும் - ஏன்
என்று கேட்க மாட்டாய்
நானும் - எதற்கு
என்று - வினவ மாட்டேன்.

என் நேசிப்பும்
அப்படியே....

உன் கருப்பு தசைகளில்
திசை எதுவாய் இருந்தால் - என்ன?

நீ
பெரும்
பதக்கமும் - புகழும்
அமெரிக்கர்களுக்கு
வேண்டும்.

பின்னர்
சான்பிரன்சிஸ்கோவில்
அவ்வப்போது
கொளுத்தப்படுவாய்
முதுகில் குத்தப்படுவாய்.

மண்ணில் மாண்புகளை
ஏற்படுத்திய-நீ
மனதில் மரணித்துபோவாய்,
நீயும் மனிதன்தானே....!

உலகஅரங்கில் -உன்
இடத்திற்கு - நீ
போராடும்போது - நான்
தவித்திருக்கிறேன்,
என்னால்
உதவமுடியவில்லையே...என்று.

ஆமாம் சகோதரனே !

கறுப்புத் தோல்
எங்களுக்கோர் அங்கி
உனக்கு அதுவே
போர்க்கொடி!


உன்னை
நேசிக்கின்றேன் - என்
ஆப்ரிக்க சகோதரனே

நான்
இந்தியன் என்பதால்.

- தோழன் மபா

Friday 12 February 2010

காசி ஆனந்தனின் ஹைக்கூ க(வி)தைகள்!




காசி ஆனந்தன் - ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவர். ஈசாப் கதைகள் பாணியில் கவிஞர் எழுதியுள்ள இந்தக் கதைகள் வித்யாசமானவை. ஹைக்கூ கதைகளா? என்று திகைக்காதீர் ஒவ்வொன்றும் ஒரு வைரம். 1994ம் வருடம் இக் கவிதை ' சுபமங்களா'வில் வெளிவந்தது.

உரிமை:

மழை
தவளைகள் மகிழ்ச்சியோடு உரக்க குரலெழுப்பின.

குளத்தில் இருந்த ஆமை தவளைகளைப் பார்த்துச் சொன்னது:-

'இப்படி கத்துகிறீர்களே - உங்கள் குரலைக் கேட்டுப் பாம்பு
உங்க்ளைப் பிடித்துவிட்டால் உங்கள் நிலை என்ன ஆவது?'

தவளைகள் சிரித்தன,

'நாங்கள் கொஞ்சமும் கவலைப்பட மாட்டோம் என்றது'
கூட்டத்தில் ஒரு தவளை.

இனோரு தவளை சொன்னது
'மூச்சை இழக்கலாம் - பேச்சை இழக்கலாமா?'


**********

நடப்பு:

சேவல் கூவியது.

'நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு
வாழ்த்துகிறது....' என்று கதிரவன் பூரித்துப் போனான்.

மாலை வந்தது.
கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான்.

சாயும் போது...

'நான் விழுகிறேனே...என்னைத் தாங்க யாருமே வரமாட்டார்களா' என்று ஏங்கினான்.

சேவலை அவன் எதிர்ப்பார்த்தான்.
வரவில்லை.
விழுந்துக்கொண்டே கதிரவன் சொன்னான்:-

'எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை'


*********




சண்டித்தனம்:

'எல்லொரையும் அடித்து நொறுக்குவேன்...'

இடியோசையோடு சண்டித்தனத்தில் இறங்கியது மின்னல்.

ஒரு நொடிதான்...

வளைந்து நொறுங்கி அது முறிந்து விழுந்தது.

மண்ணில் இருந்தபடியே மின்னலின் சண்டித்தனத்தையும் விழ்ச்சியையும்
பார்த்த தவளை சொன்னது.

'சண்டியாய் எழுவான்
நொண்டியாய் விழுவான்'


******

தேவை:

புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.

மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-

'ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?'

தாய்க்குருவி சிரித்தது.

'மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தோவையில்லை' என்றது தாய்.

தாய்குருவி சொன்னது:-

'வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்'.

Wednesday 10 February 2010

முன்பு போலவே...


















மழை பெய்யும்-இந்த
இரவில்
வானம் இருண்டு
குளிருடன் கிடக்கிறது.

மின்னல் வெட்டும்
அகால வேளையில்
உணர்வுகள்
ஒற்றையடிப் பாதையில்
வெளிச்சமிட்டுக் கிடக்கின்றன...

ஊதல் காற்றின்
தாலாட்டில் -இருவர்
உடலும் சிலிர்த்து
உலகின்
மறு கூட்டலுக்கு
தயாரானது,

அசைந்தெரியும்
வெளிச்சத்தில்
முகங்களும் கைகளும்
உயிர்களுக்குள்
துழாவின...

அடித்து பெய்த
மழையில்
படுக்கை;
உணர்வுகளுக்குள்
அமிழ்ந்தே கிடந்தது.

எதன் பொருட்டும்
இருந்திராத
முன்மாதிரியில்




மீண்டும் - ஓர்
இரவு

செப்பனிடப்படாமல்
முன்பு போலவே...
கலைந்தே
கிடந்தது.

Sunday 7 February 2010

திக்கற்றவர்களின் தெய்வம் -"அன்னை தெரசா"

  • 1997ம் வருடம் செப்டம்பர் 6ம் தேதி, அன்னை தெரசாவின் இறப்புச் செய்தி உலகை கலங்கடித்த நேரம். அப்போது நான் தினபூமியில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன், அன்னையின் மறைவு என்னையும் தாக்கியது. அன்னையின் மறைவுக்காக நான் எழுதிய கவிதைதான் இது. செப்டம்பர் 13ம் தேதி அன்று, தினபூமி நாளிதழில் முதல் பக்கத்தில் இக் கவிதை வெளிவந்தது.

    திக்கற்றவர்களின் தெய்வம்
    "அன்னை தெரசா"


    எதுவுமற்ற இருட்டில்
    தனித்து விடப்பட்ட
    உலகில்
    உன் வருகை
    சூரியனாய் பிரகாசித்தது

    நலிந்த கைகளில்
    வலிமை வாய்ந்த-உன்
    அன்பு...
    நிறப் பாகுபாடுகளைக்
    கடந்து...

    மனித நேயத்தின்
    மகத்துவத்தை -உலகிற்கு
    உணர்த்தின,

    முகவரி அற்ற
    மனிதர்களின்
    முகவரியாய் -நீ
    மாறிய பிறகு
    மாற்றம்
    மற்றவர்களிடமும்
    ஏற்பட்டது

    திக்கற்றவர்களுக்கு
    நாமும்
    துணை என்று !

    உன் பயணம்
    தொடங்கிவிட்ட வேளையில்
    மொளனக் கதறலோடு
    நாங்களும்
    பின் தொடர்கிறோம்

    நீ
    ஒளியாய் பிரகாசித்து
    மெழுகாய் உருகிவிட்டாயே!

    உலக விழிகளின்
    கண்ணீர் -உனது
    காலடியில்

    எங்கள் அன்னையே !

    நீ
    மீண்டும்
    வருவாய்தானே...?

    "தேவதூதர்கள்
    மீண்டும்
    உயிர்த்தெழுவார்கள்"