Friday 28 January 2011

கீழே கொட்டிக் கிடந்த கவிதை வரிகள்


இது

மௌனம்
தூங்கும் நேரம்

வானத்தின்
விஸ்வரூபத்தில்- பூக்கள்
நட்சத்திரங்களோடு
மலர்ந்துக் கிடந்தன

அந்த ஏகாந்த
இரவின் குளிர்ச்சியில்
பனித்துகள்கள் போர்வைக்குள் 
ஒடுங்கிக்கிடந்தன

கைகளுக்குள்
சிறைப்பட்ட
முழு நிலவில்
மலைகளும்
பள்ளத்தாக்குகளும் -என்
கைகளுக்குள்
அடைப்பட்டுக் கிடந்தன!

தென்றலுக்கு
வியர்த்த நொடியில்
எனது கரங்கள்
அன்னிச்சையாய்
கை குட்டையைப்
பற்றின...

ஒற்றியெடுத்த
வியர்வைத் துளியில்
'நீர்' வெள்ளமாய்
'சூல்' கொண்டிருந்தது.

இரவு
எந்தவித
வெளிச்சமுமின்றி
இருட்டில்
தவித்துக் கிடந்தது!

எனது ஒற்றை
மெழுகுவர்த்தியின்- ஒளியில்
சந்திரன் -பால்
வெண்மையாய் பிரகாசித்தது.

நீண்டு கிடந்த
வெட்டவெளியில்- பாதை
வளைந்து நெளிந்து
தனிமையில்
பிரயாணம்  செய்தது...

குளிர் நிறைந்த
குளத்தில்மீன்கள்
மூச்சையடக்கி
 நீச்சல் பழகின...

பகலில்
குளிர்தாங்காமல்
'தீ 'மூட்டி
குளிர்காய்ந்த சூரியன்

வெதுவெதுப்பான
தடாகத்தில் -தன்
ஆடைகளைந்து
வெப்பம் -தீர
குளித்து எழுந்தது.

முன்னுக்கு பின்னாய்
முரன்பட்ட கவிதை வரியில்

எனது
எழுத்துக்கள்
காகிதத்தை - கிழித்து
கீழே சிதறி கிடக்கின்றன...

முடிந்தால்
கண்களால்
அள்ளிக்கொள்ளுங்கள். 

Sunday 23 January 2011

அவளி'டம்' விற்பனைக்கு




  •  








புழுதி படர்ந்த  -அந்த
ஒற்றையடிப் பாதையில்
மலைகலெனத்- தன்
மார்புத் திறந்து -பல
யுகங்களாக -அவள்
படுத்திருந்தாள்.



கசிந்து ஒழுகிய
முலை காம்புகளில் 
வியர்வை அரும்பி
உப்புப் பூத்திருந்தது,
கால்களின் இடுக்குகளில்
மனித கைகளின் 
'ரேகைகள்'
அழுக்குப் படிந்து
அப்பியிருந்தன...
 

விலை கூவி... 
விற்க -அவள்
சம்மதம் தேவையில்லை
என்றானபோது...

நாயும் புணர்ந்தது...
நரியும் புணர்ந்தது...
 

காப்பாற்றுவார் யருமின்றி
அவள் உடல்கள் எங்கும்
எல்லைகள் பிரிக்கப்பட்டு
வேலியிடப்படிருக்கின்றன....
விலையும்
குறிக்கப்பட்டிருக்கின்றன.
 

முக்கி முனகினாலும்
கதறி அழுதாலும்
காலை குறுக்கி
'குறி'
காட்டமறுத்தாலும்

வன்புணர்வுச் செய்து-அவளின்
சதை  விற்றான்
'ரியல்' மனிதன்!?


செழுமை பூத்து
விளைந்திருந்தாலும் -எங்கோ
வனாந்திரத்தில் மறைந்திருந்தாலும்
அவனின் கண்பட்டுவிட்டால்...
அங்கே முளைத்திருக்கும்
ஒரு அடுக்குமாடி
குடியிருப்பு!



இனி அவள்
விளை நிலங்களா
இல்லை
விலை நிலங்களா? 

 
அவள் 
எங்கேயாவது 
தனிமையில் - தனது
ஆடைகளைக் களைந்து
விஸ்தாரமாக -
படுத்துக்கிடந்தால்...




அடுத்த நாள்
பத்திரிகைகளில்
அரைப்பக்கம்  விளம்பரம்
'இடம் விற்பனைக்கு'
என்று...!?



****