Tuesday, 28 December 2010

காதல் கானா...

 காதல் கானா...

கண்ண தொறந்து பாக்கசொல;


காலையில பத்துமணி...

காதாண்ட கத்திகினேகீரா;

...ஏன் ஊட்டுக்காரி...இன்னாத்துக்கு கூவுறன்னு

உட்டேன் ஒன்னு லெப்ட்டுல...

ங்கொம்மால உருள கெயங்கு மாறி

வீங்கிகிச்சி கயித்துல...வழிச்சி வழிச்சி ஊத்துனா பாரு;

வாய் கீயிர வரைக்கும்...

அவ சொன்னதெல்லாம் கேட்டீங்கோ?

ஒங்க காது நொறைக்கும்...மொறச்சி மொறச்சி பாத்துகினே

வீட்டுக்குள்ள வந்தா...

மொனவிகிட்டே வேலையெல்லாம்

ஈத்து போட்டு செஞ்சா...பண்ணுனது தப்புன்னு;

அப்பாலதான் புரிஞ்சிது...

பொண்டாடிக்கு பூ வாங்க

மன்சு ரொம்ப துடிச்சுது...மல்லிய பூவும் அல்வாவும் - என்

மல்கோவாவுக்கு வாங்கிக்கினு...

மாலை நேரத்துல

மன்மத ராகம் பாடிகினு...வேலை முடிஞ்சதும்

வீட்டுக்கு போயி பாத்தா?

விட்டத்துல தொங்கிபுட்டா

வீட்டுக்காரி சீதா...ஒன்னியும் இல்லாத பிரச்சனைக்கா

உசுர உட்ட பாவி?

ங்கோத்தா உன்ன தேடி வரும் பாரு

என்னோட ஆவி...பொண்டாட்டிய அடிக்காத...

சந்தேகத்துல துடிக்காத...

பின்னால போயி பாக்காத...

பேச்ச ஓட்டு கேக்காத...

முழுசா அவள நம்பு...

முடியலன்னா?

என்ன மாறி தொங்கு...

-சுவாமிநாதன்
சோழியவிளாகம்

Monday, 27 December 2010

ஆயா

  ஆயா
நினைவு தெரிந்த பொது
நீயே அருகில் நின்றாய்...
பசியில் அழுத பொது
...பிசைந்து அன்னம் தந்தாய்...


அம்மணமாய் அலையும்போது
அள்ளி முத்தமிட்டாய்...
கண் கலங்கி நின்றபோது
கன்னம் துடைத்திட்டாய்...


கண்ணயர்ந்த சாய்ந்தபோது
கனத்த மடி தந்தாய்...
கண்மூடி தூங்கும் போது
கட்டி அனைத்திட்டாய்...


அடம்பிடித்து கேட்டபோது
அழகாய் விளக்கம் சொன்னாய்...
குளிக்க நான் போனால்
கூடவந்து முதுகு தேய்த்தாய்...


பள்ளிக்கூடம் போகும்போது
பாதை முற்றும் பார்த்திருப்பாய்...
கலைத்து வரும்போது
கதைகள் நூறு சொல்லிடுவாய்...


அரை டவுசர் அணிந்த நானும்
ஆண்மகனாய் ஆகிவிட்டேன்...
ஆசையாய் வளர்த்த நீயோ!
ஆகாசம் சென்றிட்டாயோ?


படல் போட்டு வேளி மூட;
பலமுறை சொன்னவளே?
பாவி உன்னை விட்டு செல்வேன்;
என்றொரு நாளும் சொல்லலையே!


பயிர்பிடித்து நாற்றடிக்கப்;
பாங்காக சொன்னவளே?
பாதியிலே போய்விடுவேன்;
என்றொரு நாளும் சொல்லலையே!


ஐந்து பிள்ளை பெற்று
அனைத்திற்கும் உணவு தர...
பட்டினியாய் இருந்தபோதும்
நடவு நடப் போனவளே?


அவரவர் குடும்பத்தோடு
மகிழ்ச்சியாய் இருக்கையிலே...
அனைத்திற்கும் வித்திட்ட
அஞ்சலை உன்னைக் காணோமே?


கொள்ளு பேரன் வந்தபோதும்
எந்தன் பேரன் நீதான்னு
கூசாமல் சொன்னவளே!
குழியில் உன்னை வைத்தபோது...
குரல்வேடிக்க அழுத என்னை
கண்திறந்து பாக்கலையே?


பீத்துணி கசக்கி போட்ட
பெற்றவளே உன்னை எண்ணி...
பேரன் நான் அழுகிறேனே?


பேசாம கொள்ளாம இருக்குறியே - உனக்கு
பாசமது போயிடிச்சா?
பாவி மனம் காஞ்சிடிச்சா?


ஏகவசனம் பலசொல்லி ஏகத்துக்கும் திட்டுவியே?
ஏதாவது ஒன்றை சொல்லி இப்ப என்னை திட்டேன்?


கோவத்துல நீ அடிச்ச;
காயத்துக்கு மருந்து போட்டு...
கால்மாட்டுல அழுதவளே?


பாவமாவே இல்லையாடி என்னபாத்தா?
பாதகத்தி உனக்கு யார்மேல என்ன கோவம்?


ஆயிரந்தான் இருந்தாலும்...
ஆயா நீயிருந்தா?
ஆலயமே போகமாட்டேன் - எனக்கு
அத்தனையும் நீதான...


-சுவாமிநாதன் 
சோழியவிளாகம்

Thursday, 23 December 2010

ஒரு பகல் நேரத்தில்...

!!!!!கவிதை!!!!!!


நான் எழுதிய இக் கவிதை தினமணி கதிரில் (22/04/2001) அன்று வெளிவந்தது.

நீ
வந்து
சென்றதற்கான
அடையாளம் எதுவும்
இல்லையென்றுதான்
நினைத்திருந்தேன்.


பார்வையும்
அப்படித்தான்
சொன்னது.


மேஜையில்
இருந்த
பூச்-ஜாடியும்
அப்படியே
இருந்தது.


கொடியில்
காயவைத்த
*அவளது துணியிலும்
வித்யாசம் இல்லை.


டம்ளரில்
இருந்த
பாலுக்கும்
சேதமில்லை.


இருந்தும்
கண்டு பிடித்துவிட்டேன்,


அட!
போக்கிரி
சிட்டுக்குருவியே...


அரிசியை
இப்படியா
இறைத்துவிட்டு
செல்வது...?

-தோழன் மபா

*நான் முதலில் எழுதிய கவிதையில் 'துணியிலும் வித்யாசம் இல்லை ' என்று எழுதிஇருந்தேன், இப்போது துணிக்கு முன்பாக 'அவளது' என்ற வார்த்தையை சேர்த்து எழுதி உள்ளேன்.

புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டும்


உன் வசிகர தோற்றத்தில் வசியப்படும்


ஆண் மகன்கள்

உன் மெல்லிய வெள்ளை உடலில்

தங்கம் நிறம் பூசிய பொன் உதடுகள்

உன்னிடம் வசியபட்டவர்களில்

நானும் ஒருவன்

உன் அழகிய உடைகளில்ருந்து

உன்னை உருவிவிட்டு ,,,,,,,,

உன் பொன் நிற உதட்டில்

என் வற்றி போன உதட்டை பதிக்கும் போது

என் விடலை பருவ வயதுக்கு

இது தேவைதானா என்று...

நினைக்க தோணும்.

பெண்ணாகவே உன்னை பாவித்ததால்

 புண்ணாகிய போன இதயமும்...

புகையாக போன

புண்பட்ட நெஞ்சும்

புகைந்துகொன்டுதான் இருக்கிறது...

புவிக்குள் போகும்வரை....

புகையாய்.... ?!
 
-ப. கெளதம்